பரிணாமமும் தமிழும் -3

இப்பகுதியில் உள்ளம், மணம், புத்தி, சித்தம், அகங்காரம், சுரோத்திராதி ஞானேந்திரியம் மற்றும் பஞ்சவாயுக்கள் இவற்றிற்கான விளக்கமும், தன்மைகளும் அளிக்கப்படும்.

பகுதி–1

பகுதி-2

 

இந்தச் சூக்ஷும பூதங்களினின்றும் சூக்ஷும சரீரங்களும் ஸ்தூல பூதங்களும் தோன்றும். அஃதெங்ஙனமெனின் –

ஆகாச முதலான பஞ்சபூதங்களின் சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரையெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது அந்தக்கரணம். இந்த அந்தக்கரணத்தில் ஆகாசத்தின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் ஆகாசத்தைப்போலச் சகலமான கேள்விக்குங் இடங்கொடுத்துத் தரிக்கின்றது. இப்படித் தரிக்கின்ற விருத்திக்கு (விருத்தி-பரிமாணம்) உள்ளம் என்று பெயர். இந்த அந்தக் கரணத்தில் வாயுவின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் வாயுவைப் போல அலைகின்றது, இப்படி அலைகின்ற விருத்தி மனமென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அக்கினியன் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் அக்கினியைப்போல ஈது இன்னதென்று விளக்குவிக்கின்றது. இப்படி விளக்குவிக்கின்ற விருத்திக்குப் புத்தியென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அப்புவின் அம்சங் கூடிதனற்கு அடையாளம், இந்த அந்தக் கரணமும் அப்புவைப்போல விடயங்களில் பற்ற இழுக்கின்றது. இப்படி இழுக்கினற விருத்திக்குச் சித்தம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் பிருதிவியின் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் பிருதிவியைப்போலக் கடினமாக நின்று நானென்று அபிமானிக்கின்றது. இந்தஅபிமான விருத்திக்கு அகங்காரம் என்று பெயர்.m

பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது அந்தகரணம். அந்தகரணம் பஞ்சபூதங்களின் தன்மையையும் கொண்டுள்ளது.

 • ஆகாயம் (வெளி) யின் அடையாளமாக அனைத்து கேள்விக்கும் இடமளிக்கிறது. இந்த பரிமாணத்திற்கு உள்ளம் என்று பெயர்.
 • வாயு (காற்று) அம்சத்தின் அடையாளமாக நகரும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு மணம் என்று பெயர்.
 • அக்னி (நெருப்பு) அம்சத்தின் அடையாளமாக சந்தேகங்களை தெளிவிக்க கூடியதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு புத்தி என்று பெயர்.
 • அப்பு(நீர்) அம்சத்தின் அடையாளமாக விசயங்களில் ஒட்டும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு சித்தம் என்று பெயர்.
 • பிருதிவி(நிலம்) அம்சத்தின் அடையாளமாக நிலைத்த தன்மையுடன் அபிமானத்துடன் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு அகங்காரம் என்று பெயர்.

அதாவது அந்தகரணம் எனும் ஒரே தத்துவமே பல்வேறு வடிவுகளில் நிலைகளில் பல்வேறு செயல்களை செய்கிறது என விளக்க படுகிறது.

 

இன்னும் ஆகாச முதலான பஞ்ச பூதங்களினுடைய சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்துத் தனித்தனியே வைத்தது சுரோத்திராதி ஞானேந்திரிய மென்று சொல்லப்படும். இவைகளில் சுரோத்திரம் ஆகாசத்தின் குணமான சத்த மாத்திரத்தை அன்றியும், துவக்கு வாயுவின் அம்சமானபடியால் வாயுவின் குணமான பரிச மாத்திரத்தை அறியும் சக்ஷு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியின் குணமான ரூப மாத்திரத்தை அறியும். சிங்ஙுவை அப்புவின் அம்சமானபடியால் அப்புவின் குணமான ரசமந்திரத்தை அறியும் ஆக்கிராணம் பிருதிவியின் அம்சமானபடியால் பிருதிவியின் குணமான கந்த மாத்திரத்தை அறியும் இப்படி ஐந்தும் ஒன்றோடொன்று கூடாதபடியால் ஒன்று மற்றொன்றின் குணத்தை கிரகிக்க அறியாது அந்தக்கரணத்தில் ஐந்து மாத்திரையும் ஒன்றாய்க் கூடினதுகொண்டு ஐந்திந்திரியங்களினாலும் ஐந்து விடயங்களையும் அறியும். இந்தச் சத்துவ குணத்திலுண்டான அந்தக்கரணம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தும் சத்துவாம்சமானபடியால் ஞான சாதனமாயின.

பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  சுரோத்திராதி ஞானேந்திரியம் எனப்படும்.

 • ஆகாயத்தின் அம்சம் சுரோத்திரம்- சத்தம் மாத்திரத்தை அறியும்
 • வாயுவின் அம்சம் துவக்கு- பரிசம் மாத்திரத்தை அறியும்
 • அக்கினியின் அம்சம் சக்ஷு- ரூபம் மாத்திரத்தை அறியும்
 • அப்புவின் அம்சம் சிங்ஙு- ரசம் மாத்திரத்தை அறியும்
 • பிருதிவியின் அம்சம் கந்தம்- ஆக்கிராணம் மாத்திரத்தை அறியும்

 

இன்னம் ஐந்து பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது வியானாதி பஞ்சவாயுக்கள். இவைகளில் வியான வாயு ஆகாசத்தின் அம்சமானபடியால் ஆகாசத்தைப் போலச் சர்வாங்கமும் வியாபித்திருக்கும். பிராண வாயு வாயுவின் அம்சமானபடியால் வாயுவைப்போல் இருதயத்திலிருந்து நாசியாதிபரியந்தம் அலையும். அபானவாயு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியைப்போலச் சடராக்கினியாக உஷ்ணத்துக் கொண்டு குதத்தைப்பற்றி நின்று உண்ட அன்னபானாதிகளை சீரணப்பிக்கும். சமானவாயு அப்புவின் அம்சமானபடியால் சரீர நடுவான நாபித் தானத்தினின்று உண்ட அன்ன ரஸங்களை அப்புவைப்போல இழுக்கும், உதான வாயு பிருதிவியின் அம்சமானபடியால் கண்டத்தைப் பற்றி பிருதிவியைப் போலக் கடினமான நின்று உண்ட அன்னபானாதிகளைக் கடையும், இந்தப் பஞ்ச வாயுக்களையு மல்லாமல் வாந்தி பண்ணுவிக்கின்றது நாகனென்றும், இமைத்து விழிப்பிக்கின்றது கூர்மமென்றும், குறு குறுத்துச் தும்மச் செய்கின்றது கிரிகரனென்றும், கொட்டாவி கொள்ளச் செய்கின்றது தேவதத்தனென்றும், வீங்கச் செய்கின்றது தனஞ்செயனென்றும் வேறே ஐந்து வாயுக்களுண்டென்று சிலர் சொல்லுவார். இவ்வைந்தும் பிராணணுடைய தொழிலானபடியால் வேறல்ல இன்னம் ஆகாச முதலிய பஞ்ச பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்துத் தனித்தனியே வைத்தது வாக்காதி கர்மேந்திரியமென்று சொல்லப்படும்.

பஞ்சபூதங்களின் மத்திம(ரஜோ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது வியானாதி பஞ்சவாயுக்கள். 

 • ஆகாயத்தின் அம்சம் வியான வாயு- உடம்பின் அனைத்து பாகங்களையும் நிறைந்து இருக்கும்
 • வாயுவின் அம்சம் பிராண வாயு – இருதயத்திலிருந்து நாசி(மூக்கு) வரை செல்லும்
 • அக்கினியின் அம்சம் அபானவாயு – அக்னியை போல தகித்து குதபாகத்தில் சாப்பிட்ட உணவு பொருள்களை ஜீரணம் செய்யும்
 • அப்புவின் அம்சம் சமானவாயு – வயிற்று பகுதியிலிருந்து உணவு பொருள்களை சேகரம் செய்யும்.
 • பிருதிவியின் அம்சம் உதான வாயு – தொண்டையிலுருந்து உணவு பொருள்களை அரைக்கும்

 

இவ்வாயுக்கள் அல்லாமல் உடலில் வேறு 5 வாயுக்கள் உள்ளதாக சொல்லபடும்.

நாகன் – வாந்தியை உருவாக்குகிறது

கூர்மம் – இமைத்தல்

கிரிகரன் – தும்ம செய்தல்

தேவதத்தன் – கொட்டாவி விடுதல்

தனஞ்செயன் – வீங்க செய்தல்

 

இவை பிராணனின் செயல்கள் என வகை படுத்த பட்டுள்ளன.

 

பஞ்சபூதங்களின் ரஜோ அம்ச தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  வாக்காதி ஞானேந்திரியம் எனப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)