பரிணாமமும், தமிழும்

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் உயிரியல் தோற்றத்திற்கு பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற கொள்கை வலுவடைந்து வருகிறது. பழைய சித்தர் பாடல்களை படிக்கும் போது  சேஷாத்திரி சிவனார் அருளிய நாநாசீவவாதக் கட்டளை எனும் நூலின்  “ஒரு பொருளில்/தத்துவத்தில் இருந்தே பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும்” என்ற கருத்தொற்றுமையுடன் கூடிய ஒரு கட்டுரையை படித்தேன்.

இந்நூல் இறைவன் எனும் பொருள்/தத்துவம் மற்ற படைப்புகளை உருவாக்கியது எனும் மேலை தத்துவத்தை நிராகரிக்கிறது. மாறாக அனைத்து படைப்புகளும் ஒரே தத்துவத்தின் பரிணாம வளர்ச்சியே எனும் அத்வைத தத்துவத்தை முன் வைக்கின்றன.

 

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட இக்கருத்துக்கள் ஆரம்ப நிலையில் உள்ளது என்பது எளிதில் உணர தக்கதே. இருந்த போதிலும் இந்நூலின் தொன்மையை பார்க்கும் போது இந்திய தத்துவங்களும் ஆன்மீக மரபும் மற்ற தத்துவங்களுடன் ஒப்பிட அக்காலத்தில் அடைந்திருந்த சிறப்பை அறிய முடியும்.

 

இந்நூலை அனைவரும் அறியும் பொருட்டு மின்னாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். என்னுடைய விளக்கங்களையும் அருகே அளித்திருக்கிறேன். ஆக்கத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

 

 

சேஷாத்திரி சிவனார் அருளிய

நாநாசீவவாதக் கட்டளை

•••••••

சாற்றுக்கவி

இப்பியினிடையே யெழுமி சதம்போ

லென்றுமா யிலகியின்யாகி

யொப்பிபடவேது மின்றியபிரமத்

துற்றிடுங் பகுதிமுன்னாய்

வப்பிரபஞ்ச முறைமையைத்தூல

வருந்ததி நியாயமேயென்னச்

செப்பினன்யாருந் தெளிவுறச்சேஷாத்

திரிசிவ னென்னுமாதவனே.

காப்பு

ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன்

ஞானகுரு வாணிகையு ணாடு

 

சாற்று கவி விளக்கம் (ஆசிரியர் குறிப்பு)

இப் புவியினிடையே எழுமி சதம்போல் என்றுமாயிலகி இன்யாகி  ஒப்பிபடவேதும் இன்றிய பிரமத்து உற்றிடுங் பகுதி முன்னாய் அப்பிரபஞ்ச முறைமையை தூலவருந்த அதி நியாயமே என்ன செப்பினன் யாரும் தெளிவுறச் சேஷாத்திரி சிவன் என்னும் ஆதவனே.

 

நூல்

சுத்தப் பிரமமாயிருக்கின்ற சர்வசாக்ஷீயினிடத்திலே அக்கினியிற் சூடுபோல அபின்னமாக ஒரு சத்தி உண்டு; அந்தச் சத்தி அவ்வதீதப் பிரமத்தில் அடங்கியிருக்கும் போது அதற்குச் சுத்தப்பிரமமென்று பெயர். இந்தச் சத்தி விசிரிம்பித்துச் சுத்தப்பிரமத்தை வியாபிக்கும் போது அப்பிரமம் பரைவியாபகத்துள் இருந்தபடியினாலே அதற்குப் பரப்பிரமமென்று பெயராம்.

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு தத்துவம் இருந்தது. அனைத்தையும் அறிந்த ஒரே சாட்சி அதுவே (ஒன்றே ஒன்று இருந்ததால் ).  இப்பிரமத்தின் உள்ளார்ந்த தன்மையாக சக்தி இருந்தது. (உவமை:நெருப்பினுடைய சூடு போல)  ஆரம்பத்தில் அதன் சக்தி வெளிப்படாமல் அடங்கி இருந்தது. அதன் பெயர் சுத்த பிரமம்.(1)

இரண்டாம் நிலையாக சக்தியானது ப்ரமத்தை முழுவதும் நிரம்பி இருக்கும் போது அப்பிரமத்தின் பெயர் பர பிரமம்.(2)

 

இலக்ஷண சூன்யமாயிருக்கின்ற இந்தச் சத்திக்குப் பிரயத்தினுடைய சந்நிதானத்தில் புருடசமுகத்திலே ஸ்திரீக்கு இன்பஞ் சனித்தாற் போல அவிகிர்த சத்துவ ரஜஸ் தமோ குணங்கள் உண்டாயின. அவற்றில் சுத்த சத்துவத்திற்கு ஆனந்தரூபசத்தி என்று பெயர். சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி என்று பெயர். சுத்த தமஸிற்குச் சத்ரூப சத்தி என்று பெயர்.

ஆரம்பத்தில் இச்சக்தியின் இலட்சணம் (தன்மை) ஏதும் இல்லாமல் இருந்தது. பின்பு இச்சக்தியிலிருந்து இயல்பாகவே சத்வம், ரஜஸ், தமோ குணங்கள் உண்டாயின. (உவமை: ஆணினால் பெண்ணிற்கு சுகம் கிடைப்பது போல) சுத்தமான (கலப்பில்லாத) சத்துவம் ஆனந்தரூபசத்தி எனவும், சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி எனவும், சுத்த தமஸிற்குச் சத்ரூபசத்தி எனவும் பெயர்

 

இவற்றில் காரணமான ஆனந்தரூப சத்தியுடனே பரப்பிரம்மம் கூடிச் சர்வானந்த மென்னும் சுழுத்தியவஸ்தையை யடைகின்றபோது பரப்பிரமமென்கின்ற பெயர்போய்ப் பரமானந்தரென்கிற பெயர்வந்தது. இந்தப் பரமானந்தர் சித்ரூப சக்தியுடனேகூடிச் சர்வப் பிரகாசமென்னுஞ் சொப்பனாவஸ்தையை யடைகின்ற போது பரமானந்தரென்னும் பெயர் போய்த் தேசோமயரென்னும் பெயர் வந்தது. இந்தத் தேசோமயர் சத்ரூப சத்தியுடனே கூடிச் சர்வ வியாபகமென்னுஞ் சாக்கிராவஸ்தையை யடைகின்றபோது தேசோமயமென்னுஞ் பெயர் போய்ப் பரிபூரணமென்னும் பெயர் வந்தது.

பரபிரமம் ஆனந்தரூபசத்தியுடன் (கலப்பில்லாத சத்துவம்) சேர்ந்து சர்வானந்தம் (சுழுத்தியவஸ்தை) நிலையை அடைகிறது. பரமானந்தர் எனும் பெயரால் அழைக்க படுகிறது.(3)

பரமானந்தர் சித்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத ரஜஸ்) சேர்ந்து சர்வப் பிரகாசம் (சொப்பனாவஸ்தை) நிலையை அடைகிறது. தேசோமயர் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (4)

தேசோமயர் சத்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத தமஸ்) சேர்ந்து வியாபகம் (சாக்கிராவஸ்தை) நிலையை அடைகிறது. பரிபூரணம் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (5)

 

[தொடரும்]

1 கருத்து:

  1. கிடைப்பதற்கரிய நூலை மின்னாக்கம் செய்தமைக்கு எனது பாராட்டுக்கள்.

    தங்களின் விளக்க உரை நன்றாய் உள்ளது. ஆயினும் இன்னும் சற்று விரிவான வகையில் தங்களது விளக்க உரை அமைந்தால் இன்னும் சிறப்பாக அமையும் என கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு

எல்லோரும் இரசிக்கும் வகையி்ல் பார்த்து பதமா ;-)