கலை என்பது கடவுளுக்கும் கலைஞனுக்குமான கூட்டு பணி, கலைஞன் குறைவாக ஈடுபடும் அளவிற்கு நல்லது ~அன்ரே கிட்
Art is a collaboration between God and the artist, and the less the artist does the better. ~André Gide
சமீபத்தில் எம் எப் ஹீசைனின் தனிப்பட்ட வாழ்க்கையினால் மறுபடியும்அவரது ஓவியங்கள் பதிவர்களிடம் விவாத பொருளாகி இருக்கிறது. வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமான கலைஞர்களான எழுத்தாளர் திரு. ஜெயமோகனும், மன நல மருத்துவர் திரு. ருத்ரனும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இருவரின் பதிவுகளையும் படித்து வரும் எனக்கு, எழுத்தாளரான திரு. ஜெயமோகன் ஒரு ஓவியரின் பார்வையில் சரஸ்வதியின் படத்தை கலை கண்ணோடத்தோடு பார்க்கும் படி வாசகர்களை அறிவுறுத்தியதும், ஓவியரான திரு ருத்ரன் ”ஸ்ரீமாதா” விளக்கமளித்து இது இந்திய மதங்களின் வழிகாட்டுதல் அல்ல என்று அறிவுறுத்தியதும் ஒரு மாற்று அனுபவமாக இருந்தது.
பொதுவாக வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பதிவுகளின் சாராம்சம் கடை நிலை வாசகனான என்னை போன்றவர்களுக்கு கீழ் வரும் கருத்துக்களை அறிவுறுத்துவதாக கருதுகிறேன்.
- இந்து மதம் அல்லது இந்திய மதம் என்பது தன் தெய்வங்களை நிர்வாணமாக வரைய அனுமதி அளிக்கிறது.
- ஒரு ஓவியனுக்கு தன்னுடைய படைப்பை தான் விரும்பிய வகையில் படைக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது.
கீழ்வரும் படங்களை பாருங்கள் இவை இரண்டுமே அரை நிர்வாண படங்கள் தாம். இவ்விரண்டு படங்களும் ஒரே விதமான விளைவுகளையா பார்வையாளர்களுக்கு அளிக்கின்றன ?
- தெய்வங்களின் நிர்வாண உருவகங்கள் பெண்களை உயர்வு படுத்துவதாகவும், வழிப்பாட்டுகுறியதாகவும் இருந்தன. அல்லது குறைந்த பட்சம் உடல் / உடலுறவின் அழகியலை வெளிப்படுத்தவதாக கூட இருந்தன. ஆனால் ஹூசைன் வரையும் படங்கள் அவர் வணங்க தக்கதாகவோ அழகியல் வெளிப்பாடாகவோ உள்ளனவா? நீரில் மூழ்கி கொண்டிருக்கும்; முகமும், கழுத்துமில்லாத சரஸ்வதியின் மூலம் அவர் விமர்சனங்களை அல்லவா முன் வைக்கிறார் ? (அவரது மேலும் சில படங்கள் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை ?! அவை என்னை பொருத்த அளவில் இப்போது இருக்கும் சூழலில் வெளியிடுவதற்கு தகுதியானவை அல்ல)
- மதங்களிலுள்ள ஓட்டைகளை அவர் விமர்சனம் செய்ய துணிந்ததை வரவேற்கிறேன். ஆனால் அவர் தன் மதத்தின் கருத்துக்களில் இருந்தல்லவா ஆரம்பித்து இருக்க வேண்டும்? இதை தானே சீர்திருத்த வாதிகளான காந்தி, அம்பேத்கார், ஈவேரா முதலானோர் முன்வைத்தனர் ? பிற மதத்தினரை புண் படுத்தி தன் மதத்தை முன் நிறுத்தும் மனம் எந்த விதமான பகுத்தறிவினால் ஆனதென விளங்கி கொள்ள முடியவில்லை.
--- *** ---
ஒவ்வொரு கலைஞனும் தன் தூரிகைகளை தன்னுடைய ஆன்மாவில் நிரப்பி தன் சுய இயல்பை தன் படங்களில் வரைகிறான். -ஹென்றி வார்ட் பீச்சர்.
Every artist dips his brush in his own soul, and paints his own nature into his pictures. ~Henry Ward Beecher
இப்பதிவு மதங்கள் பற்றியது மட்டுமள்ள திரு. ஹுசைன் பற்றியது கூட தான். அப்படியே கீழே உள்ள படங்களையும் பாருங்கள். இப்பதிவிற்காக தேடிய போது அவரின் மேலும் சில ஓவியங்கள் கிடைத்தன. இவைகளை எப்படி கலை கண்ணோட்டத்தோடு பார்ப்பதென்று புரியவில்லை ?
- தன்னுடைய கண்காட்சிக்கு வரும்படி அழைக்க கடவுள் உருவத்தை பயன்படுத்திய வியாபார தந்திரம்? அஞ்சா நெஞ்சர்களின் தேர்தல் நேர கடவுள் உருவ போஸ்கள் ஞாபகத்திற்கு வந்தால் அவர் பொறுப்பல்ல :)
- சூப்பர் மேன் பனியன், ஜெட்டியுடன் அனுமன். கடவுள்களின் உருவ பொம்மை பொறித்த பொருள்களுக்கு அமெரிக்காவில் அமோக கிராக்கி. அமெரிக்க சந்தையில் ஓவியங்கள் விலை போக வேண்டாமா என்ன ? (இப்போதெல்லாம் உள்ளாடையுடன் கூடிய கலைப்படைப்பு என்றாலே ஒரு எழுத்தாளரின் ஞாபகம் தான் வருகிறது ;)
எனக்கென்னவோ அவருடைய வாழ்க்கை குறிப்பு, தன்னுடைய வியாபார திறமையின் மூலமும்,எதிர் மறையான புகழின் மூலம் வளர்ச்சியடைந்த ஒரு மனிதர்; தன்னுடைய சுய லாபத்திற்காக சொந்த நாட்டு மக்களிடம் நீங்காத பிளவை ஏற்படுத்தி விட்டு; அவர்களையும் கைவிட்டு தான் விரும்பிய சொர்க்க புரியில் வாழ போவதை போன்ற அனுபவத்தை தான் ஏற்படுத்துகிறது.
குறிப்பு:
திரு ருத்ரன், திரு ஜெயமோகன் வலைப்பதிவுகளில் அவர்களுக்கு எதிராக நிகழ்ந்த தனிமனித தாக்குதல்களுக்கு என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். மதம் குறித்த கருத்துக்களில் மிகவும் இறுக்கமான நிலை நிலவும் இப்போதைய தமிழ் வலைப்பதிவு சூழ்நிலை கருத்து பரிமாற்ற விவாதங்களில் பங்கேற்பது குறித்த நீண்ட மன போராட்டத்தை என்னுள் ஏற்படுத்தியது. இருந்த போதும் மாற்றங்களுக்கான ஆரம்ப விதையாக சிறு நிகழ்வு கூட இருக்கலாம் அல்லவா?