நாநாசீவவாத கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாநாசீவவாத கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பரிணாமமும் தமிழும் -3

இப்பகுதியில் உள்ளம், மணம், புத்தி, சித்தம், அகங்காரம், சுரோத்திராதி ஞானேந்திரியம் மற்றும் பஞ்சவாயுக்கள் இவற்றிற்கான விளக்கமும், தன்மைகளும் அளிக்கப்படும்.

பகுதி–1

பகுதி-2

 

இந்தச் சூக்ஷும பூதங்களினின்றும் சூக்ஷும சரீரங்களும் ஸ்தூல பூதங்களும் தோன்றும். அஃதெங்ஙனமெனின் –

ஆகாச முதலான பஞ்சபூதங்களின் சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரையெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது அந்தக்கரணம். இந்த அந்தக்கரணத்தில் ஆகாசத்தின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் ஆகாசத்தைப்போலச் சகலமான கேள்விக்குங் இடங்கொடுத்துத் தரிக்கின்றது. இப்படித் தரிக்கின்ற விருத்திக்கு (விருத்தி-பரிமாணம்) உள்ளம் என்று பெயர். இந்த அந்தக் கரணத்தில் வாயுவின் அம்சங் கூடினதற்கு அடையாளம். இந்த அந்தக்கரணமும் வாயுவைப் போல அலைகின்றது, இப்படி அலைகின்ற விருத்தி மனமென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அக்கினியன் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் அக்கினியைப்போல ஈது இன்னதென்று விளக்குவிக்கின்றது. இப்படி விளக்குவிக்கின்ற விருத்திக்குப் புத்தியென்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் அப்புவின் அம்சங் கூடிதனற்கு அடையாளம், இந்த அந்தக் கரணமும் அப்புவைப்போல விடயங்களில் பற்ற இழுக்கின்றது. இப்படி இழுக்கினற விருத்திக்குச் சித்தம் என்று பெயர். இந்த அந்தக்கரணத்தில் பிருதிவியின் அம்சங் கூடினதற்கு அடையாளம், இந்த அந்தக்கரணமும் பிருதிவியைப்போலக் கடினமாக நின்று நானென்று அபிமானிக்கின்றது. இந்தஅபிமான விருத்திக்கு அகங்காரம் என்று பெயர்.m

பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது அந்தகரணம். அந்தகரணம் பஞ்சபூதங்களின் தன்மையையும் கொண்டுள்ளது.

  • ஆகாயம் (வெளி) யின் அடையாளமாக அனைத்து கேள்விக்கும் இடமளிக்கிறது. இந்த பரிமாணத்திற்கு உள்ளம் என்று பெயர்.
  • வாயு (காற்று) அம்சத்தின் அடையாளமாக நகரும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு மணம் என்று பெயர்.
  • அக்னி (நெருப்பு) அம்சத்தின் அடையாளமாக சந்தேகங்களை தெளிவிக்க கூடியதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு புத்தி என்று பெயர்.
  • அப்பு(நீர்) அம்சத்தின் அடையாளமாக விசயங்களில் ஒட்டும் தன்மையுடையதாய் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு சித்தம் என்று பெயர்.
  • பிருதிவி(நிலம்) அம்சத்தின் அடையாளமாக நிலைத்த தன்மையுடன் அபிமானத்துடன் இருக்கிறது. இந்த பரிமாணத்திற்கு அகங்காரம் என்று பெயர்.

அதாவது அந்தகரணம் எனும் ஒரே தத்துவமே பல்வேறு வடிவுகளில் நிலைகளில் பல்வேறு செயல்களை செய்கிறது என விளக்க படுகிறது.

 

இன்னும் ஆகாச முதலான பஞ்ச பூதங்களினுடைய சத்துவாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை எடுத்துத் தனித்தனியே வைத்தது சுரோத்திராதி ஞானேந்திரிய மென்று சொல்லப்படும். இவைகளில் சுரோத்திரம் ஆகாசத்தின் குணமான சத்த மாத்திரத்தை அன்றியும், துவக்கு வாயுவின் அம்சமானபடியால் வாயுவின் குணமான பரிச மாத்திரத்தை அறியும் சக்ஷு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியின் குணமான ரூப மாத்திரத்தை அறியும். சிங்ஙுவை அப்புவின் அம்சமானபடியால் அப்புவின் குணமான ரசமந்திரத்தை அறியும் ஆக்கிராணம் பிருதிவியின் அம்சமானபடியால் பிருதிவியின் குணமான கந்த மாத்திரத்தை அறியும் இப்படி ஐந்தும் ஒன்றோடொன்று கூடாதபடியால் ஒன்று மற்றொன்றின் குணத்தை கிரகிக்க அறியாது அந்தக்கரணத்தில் ஐந்து மாத்திரையும் ஒன்றாய்க் கூடினதுகொண்டு ஐந்திந்திரியங்களினாலும் ஐந்து விடயங்களையும் அறியும். இந்தச் சத்துவ குணத்திலுண்டான அந்தக்கரணம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தும் சத்துவாம்சமானபடியால் ஞான சாதனமாயின.

பஞ்சபூதங்களின் உயர்ந்த (சத்வ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  சுரோத்திராதி ஞானேந்திரியம் எனப்படும்.

  • ஆகாயத்தின் அம்சம் சுரோத்திரம்- சத்தம் மாத்திரத்தை அறியும்
  • வாயுவின் அம்சம் துவக்கு- பரிசம் மாத்திரத்தை அறியும்
  • அக்கினியின் அம்சம் சக்ஷு- ரூபம் மாத்திரத்தை அறியும்
  • அப்புவின் அம்சம் சிங்ஙு- ரசம் மாத்திரத்தை அறியும்
  • பிருதிவியின் அம்சம் கந்தம்- ஆக்கிராணம் மாத்திரத்தை அறியும்

 

இன்னம் ஐந்து பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்து ஒன்றாகக் கூட்டி வைத்தது வியானாதி பஞ்சவாயுக்கள். இவைகளில் வியான வாயு ஆகாசத்தின் அம்சமானபடியால் ஆகாசத்தைப் போலச் சர்வாங்கமும் வியாபித்திருக்கும். பிராண வாயு வாயுவின் அம்சமானபடியால் வாயுவைப்போல் இருதயத்திலிருந்து நாசியாதிபரியந்தம் அலையும். அபானவாயு அக்கினியின் அம்சமானபடியால் அக்கினியைப்போலச் சடராக்கினியாக உஷ்ணத்துக் கொண்டு குதத்தைப்பற்றி நின்று உண்ட அன்னபானாதிகளை சீரணப்பிக்கும். சமானவாயு அப்புவின் அம்சமானபடியால் சரீர நடுவான நாபித் தானத்தினின்று உண்ட அன்ன ரஸங்களை அப்புவைப்போல இழுக்கும், உதான வாயு பிருதிவியின் அம்சமானபடியால் கண்டத்தைப் பற்றி பிருதிவியைப் போலக் கடினமான நின்று உண்ட அன்னபானாதிகளைக் கடையும், இந்தப் பஞ்ச வாயுக்களையு மல்லாமல் வாந்தி பண்ணுவிக்கின்றது நாகனென்றும், இமைத்து விழிப்பிக்கின்றது கூர்மமென்றும், குறு குறுத்துச் தும்மச் செய்கின்றது கிரிகரனென்றும், கொட்டாவி கொள்ளச் செய்கின்றது தேவதத்தனென்றும், வீங்கச் செய்கின்றது தனஞ்செயனென்றும் வேறே ஐந்து வாயுக்களுண்டென்று சிலர் சொல்லுவார். இவ்வைந்தும் பிராணணுடைய தொழிலானபடியால் வேறல்ல இன்னம் ஆகாச முதலிய பஞ்ச பூதங்களினுடைய இரஜசாம்சத்திலே பூதத்திற்கு ஒவ்வொரு மாத்திரை யெடுத்துத் தனித்தனியே வைத்தது வாக்காதி கர்மேந்திரியமென்று சொல்லப்படும்.

பஞ்சபூதங்களின் மத்திம(ரஜோ) தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் கலந்தது வியானாதி பஞ்சவாயுக்கள். 

  • ஆகாயத்தின் அம்சம் வியான வாயு- உடம்பின் அனைத்து பாகங்களையும் நிறைந்து இருக்கும்
  • வாயுவின் அம்சம் பிராண வாயு – இருதயத்திலிருந்து நாசி(மூக்கு) வரை செல்லும்
  • அக்கினியின் அம்சம் அபானவாயு – அக்னியை போல தகித்து குதபாகத்தில் சாப்பிட்ட உணவு பொருள்களை ஜீரணம் செய்யும்
  • அப்புவின் அம்சம் சமானவாயு – வயிற்று பகுதியிலிருந்து உணவு பொருள்களை சேகரம் செய்யும்.
  • பிருதிவியின் அம்சம் உதான வாயு – தொண்டையிலுருந்து உணவு பொருள்களை அரைக்கும்

 

இவ்வாயுக்கள் அல்லாமல் உடலில் வேறு 5 வாயுக்கள் உள்ளதாக சொல்லபடும்.

நாகன் – வாந்தியை உருவாக்குகிறது

கூர்மம் – இமைத்தல்

கிரிகரன் – தும்ம செய்தல்

தேவதத்தன் – கொட்டாவி விடுதல்

தனஞ்செயன் – வீங்க செய்தல்

 

இவை பிராணனின் செயல்கள் என வகை படுத்த பட்டுள்ளன.

 

பஞ்சபூதங்களின் ரஜோ அம்ச தன்மையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பங்கையும் தனி தனியே வைத்தது  வாக்காதி ஞானேந்திரியம் எனப்படும்.

பரிணாமமும் தமிழும் -2

   பகுதி-1ல் பிரபஞ்சத்தின் ஆரம்ப நிலை தத்துவம்(பரபிரம்மம்) எவ்வாறு 3 தன்மையுள்ள (குணங்கள்) தத்துவங்களாக உருமாற்றம் அடைந்தன என்று விளக்கப்பட்டது. இப்பகுதியில் மாயை, விஷ்ணு, பிரம்மா, ருத்ரன், மனிதர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் முக்தி எனும் தத்துவங்கள் எவ்வாறு குணங்களால் பகுக்க படுகின்றன என்பது விளக்கப்பெறும்.

இந்த அகண்ட பரிபூரண சச்சிதாநந்தப் பிரமத்தினிடத்திலே (புருடனிடத்துச் சாமர்த்திய ரூபசக்தி போலப் பிரமதின்கண் அனாதிசித்தமாயிருக்கிற மூலப்பிரகிருதியென்னுஞ் சத்திக்குச் சுத்திரஜிதத்தை உபமானமாகச் சொன்னது அநிர்வசனியத் தன்மையென்னும் பொருள் தோன்ற என்க). சுத்தியில் ரஜிதம்போல் மூலப்பிரகிருதியுயென்னும் ஒரு சத்தி உண்டு. அந்த மூலப்பிரகிருதியும் விகிர்த குணமாகிய முக்குணத்தோடு கூடியுருக்கும் அந்தப் பிரகிருதியின் சத்துவ குணத்தை மாயையென்றும், சர்வக்ஞவுபாதியென்றும், ஈசுரகாரண சரீரமென்றுஞ் சொல்லப்படும். இந்த மாயையினிடத்திலே நிர்மல சலப்பிரதிபிம்பம் போலப் பிரமம் சுலட்சணமாகப் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியத்தைச் சர்வக்ஞனாகிய ஈசுரனென்று சொல்லப்படும்.

   ப்ரம்மம் சத் சித் ஆனந்தம் என பரிபூரணமாக நிறைந்து இருந்தது.  இத்தத்துவத்திற்கு மூல பிரகிருதி எனும் சக்தி உண்டு. மூலபிரகிருதி முக்குணங்களை கொண்டு உள்ளதால், ப்ரகிருதியின் சத்துவகுணம் மாயை [6] (சர்வக்ஞவுபாதி, ஈசுரகாரண சரீரம்) என்று அழைக்கபடும். மாயையில் மறைபொருளாக பிரம்மம் பிரதிபளிக்கும். இத்தத்துவம் ஈசுவரன் (கடவுள்) என்று அறியபடும்.

 

இந்தச் சத்துவகுண மாயையினிடத்திலே சத்துவத்தில் சத்துவம், சத்துவத்தில் ரஜஸு, சத்துவத்தில் தமஸு என மூன்று குணங்கள் உண்டு. இவைகளில் சத்துவத்தில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை இரக்ஷிக்கையினால் விஷ்ணு வென்றும், சத்துவத்தில் ரஜஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை சிருஷ்டிக்கையினால் பிரமாவென்றும், சத்துவத்தில் தமஸு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த ஈசுரன் ஜகத்தை உபசம்மாரம் பண்ணுகையினால் உருத்திரனென்றும் சொல்லப்படுவன். இப்படி மூலப் பிரகிருதியின் சத்துவகுண கற்பனை சொல்லப்பட்டது.

மாயை என்பது சத்துவ குணம் கொண்டது. இச்சத்துவ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. மாயையின் பிரபஞ்சத்தை நிலை பெற செய்யும் தன்மை விஷ்ணு (சத்துவத்தில் சத்துவம் ) என்றும் [6.1],
  2. படைக்கும் தன்மை (சத்துவத்தில் ரஜஸு) பிரமா என்றும் [6.2], 
  3. மறு உருவாக்கும் தன்மை (சத்துவத்தில் தமஸு)  ருத்ரன்[6.3] என்றும் பெயர் பெறும்.

 

இனி மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் அநேகரூபமாய்ப்பிரிந்து அவித்தைகளென்றும், ஜீவகாரண சரீரங்களென்றும் ஒன்றற்கொன்று தாரதம்மியமாகச் சொல்லப்படும். இந்த அவஸ்தைகளிடத்திலும் மலின சலப் பிரதி பிம்பம் போலப் பிரமசைதன்னியம் பிரதிபிம்பிக்கும். இந்தப் பிரதிபிம்ப சைதன்னியங்களை கிஞ்சிக்ஞரென்றும், சீவ சிதாபாசரென்றும், பிராக்ஞரென்றும் சொல்லப்படும். இந்த அவித்தைகளிடத்திலேயும் ரஜஸில் சத்துவம், ரஜசில் ரஜசு, ரஜசில் தமசு என மூன்று குணங்கள் உண்டு. இரஜஸில் சத்துவம் பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் தத்துவக்ஞான நிஷ்டனாவன். இரஜஸில் ரஜசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் காமக்குரோதபரனாய்க் கர்மநிஷ்டனாவன் இரஜஸில் தமசு பிரதானமாகும்போது அதில் பிரதிபிம்பித்த சிதாபாசன் சோம்பல் நித்திரை மயக்கம் ஆகிய இவைகளை யடைவன். இப்படி மூலப் பிரகிருதியின் இரஜோகுண கற்பனை சொல்லப்பட்டது.

   மூலப்பிரகிருதியின் இரஜோகுணம் பல்வேறு தத்துவங்களாக பிரிந்து அவித்தை, ஜீவ காரண சரீரம் [7] என்றும் பிரிக்க படுகின்றன. இத்தத்துவத்தின் பிம்பமான சைதன்யம்(படைப்புகள்) கிஞ்சிக்ஞர், சீவ சிதாபாசர், பிராக்ஞர் என்று பெயர் பெரும். இந்த ரஜோ குணத்தில் மூன்று விதமான படி நிலைகள் உள்ளன.

  1. ”ரஜஸில் சத்துவம்” குணம் கொண்ட படைப்புகள் தத்துவம், ஞான நிஷ்டம் போன்ற தன்மைகள் பெறும் [7.1].
  2. ”இரஜஸில் ரஜசு” குணம் கொண்ட படைப்புகள் காமம், குரோதம், கர்மம்  போன்ற தன்மைகள் பெறும் [7.2].
  3. ”ரஜஸில் தமசு” குணம் கொண்ட படைப்புகள் சோம்பல், நித்திரை, மயக்கம் போன்ற தன்மைகள் பெறும் [7.3].

 

இனி மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு. இவ்விரண்டில் ஆவரணசத்தியானது தத்துவ ஞானியையும் ஈசுரனையுந் தவிர மற்றைச் சீவருக்கெல்லாம் சரீரத்திரயம், சிதாபாசன், சாக்ஷி சைதன்னியம் என்னு மிவைகளின் ஒன்றற்கொன்றுள்ள பேதம் தெரியவொட்டாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட சீவர் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக நானென்று அபிமானிப்பர். இந்த அபிமானத்தை அகங்காரக் கிரந்தியென்றும், சம்சாரபந்தமென்று சொல்லப்படும். சற்குரு கடாக்ஷத்தினாலே இந்த ஆவரணம் நீங்கி இருபத்தொன்பது தத்துவங்களின் ஒன்றற்கொன்றுள்ள பேதந் தெரிகின்றதே முத்தி. இப்படி ஆவரண சத்தியின் காரியஞ் சொல்லப்பட்டது.

இனி விக்ஷேபசத்தியினின்றும் சத்தகன் மாத்திரையான ஆகாசம் தோன்றிற்று. ஆகாசத்தினின்றும் பரிசதன் மாத்திரையான வாயு தோன்றிற்று. வாயுவினின்றும் ரூபதன்மாத்திரையான அக்கினி தோன்றிற்று, அக்கினியினின்றும் ரஸதன் மாத்திரையான அப்பு தோன்றிற்று, அப்புவினின்றும் கந்தகன் மாத்திரையான பிருதிவி தோன்றிற்று. இந்த சூக்ஷும பஞ்சபூதத்திற்குக் காரணமாயிருக்கின்ற விக்ஷேப சத்தியினிடத்திலே தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு என்னுமிவை அற்பங் கருவாக விருந்தபடியால் அதன் காரியமாகிய இந்தத் தன்மாத்திரைகளான பஞ்சபூதங்களும் முக்குணங்களுடனே பிறந்தன. இந்தப் பஞ்சபூதங்கட்குத் தன் மாத்திரைகளென்றும், அபஞ்சீகிருத பூதங்களென்றும், சூக்ஷுமபூதங்களென்றும், முக்குண பூதங்களென்றும் சாஸ்திரங்களில் நாமஞ் சொல்லப்படும்.

 

மூலப்பிரகிருதியின் தமோ குணத்திற்கு ஆவரணம், விக்ஷேபம் என இரண்டு சத்திகள் உண்டு.

1. ஆவரணம் [8]

   ஆவரண சக்தியானது எல்லா சீவர்களுக்கும் (கடவுளையும், முக்தியடைந்தவர்களையும் தவிர) தன்மையாக உள்ளது. இத்தன்மை மூலபொருள், சாட்சி, விளைவு இவற்றிற்கிடையேயான வித்தியாசம் தெரிய விடாமல் மறைக்கும். இதனால் மறைக்கப்பட்ட மனிதர்கள் இருபத்தொன்பது தத்துவங்களையும் ஒருமைப்பாடாக “நான்” என்று கற்பனை செய்து கொள்வர். இதற்கு அகங்கார கிரந்தி என்றும் சம்சார பந்தம் என்றும் சொல்ல படும்.

   முக்தி என்பது இந்த 29 தத்துவங்களுக்கு இடையேயான வித்தியாசம் தெரிவது.

 

2. விக்ஷேபம் [9]

   அடிப்படை இயற்கையான பஞ்ச பூதங்களின் பரிணாம வளர்ச்சி விளக்க பெறும். ஆகாயம் => வாயு => அக்னி => அப்பு => நிலம். பஞ்ச பூதங்கள் விக்ஷேபம்(முல பிரகிருதியின் தமோ குணம்- தமஸில் சத்துவம், தமஸில் ரஜஸு, தமஸில் தமஸு) இருந்து பிறந்ததால், பஞ்ச பூதங்களும் முக்குணங்களுடன் உள்ளன.  பஞ்ச பூதங்களுக்கு தன் மாத்திரைகள், அபஞ்சீகிருத பூதங்கள், சூக்ஷுமபூதங்கள், முக்குண பூதங்கள் என்று வேறு பெயர்களும் உள்ளன.

 

[தொடரும்]

பரிணாமமும், தமிழும்

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் உயிரியல் தோற்றத்திற்கு பரிணாம வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்ற கொள்கை வலுவடைந்து வருகிறது. பழைய சித்தர் பாடல்களை படிக்கும் போது  சேஷாத்திரி சிவனார் அருளிய நாநாசீவவாதக் கட்டளை எனும் நூலின்  “ஒரு பொருளில்/தத்துவத்தில் இருந்தே பிரபஞ்சம் தோன்றி இருக்க முடியும்” என்ற கருத்தொற்றுமையுடன் கூடிய ஒரு கட்டுரையை படித்தேன்.

இந்நூல் இறைவன் எனும் பொருள்/தத்துவம் மற்ற படைப்புகளை உருவாக்கியது எனும் மேலை தத்துவத்தை நிராகரிக்கிறது. மாறாக அனைத்து படைப்புகளும் ஒரே தத்துவத்தின் பரிணாம வளர்ச்சியே எனும் அத்வைத தத்துவத்தை முன் வைக்கின்றன.

 

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட இக்கருத்துக்கள் ஆரம்ப நிலையில் உள்ளது என்பது எளிதில் உணர தக்கதே. இருந்த போதிலும் இந்நூலின் தொன்மையை பார்க்கும் போது இந்திய தத்துவங்களும் ஆன்மீக மரபும் மற்ற தத்துவங்களுடன் ஒப்பிட அக்காலத்தில் அடைந்திருந்த சிறப்பை அறிய முடியும்.

 

இந்நூலை அனைவரும் அறியும் பொருட்டு மின்னாக்கம் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறேன். என்னுடைய விளக்கங்களையும் அருகே அளித்திருக்கிறேன். ஆக்கத்தில் உள்ள குறைகளை சுட்டி காட்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

 

 

சேஷாத்திரி சிவனார் அருளிய

நாநாசீவவாதக் கட்டளை

•••••••

சாற்றுக்கவி

இப்பியினிடையே யெழுமி சதம்போ

லென்றுமா யிலகியின்யாகி

யொப்பிபடவேது மின்றியபிரமத்

துற்றிடுங் பகுதிமுன்னாய்

வப்பிரபஞ்ச முறைமையைத்தூல

வருந்ததி நியாயமேயென்னச்

செப்பினன்யாருந் தெளிவுறச்சேஷாத்

திரிசிவ னென்னுமாதவனே.

காப்பு

ஆனைமுக னாறுமுக னம்பிகைபொன் னம்பலவன்

ஞானகுரு வாணிகையு ணாடு

 

சாற்று கவி விளக்கம் (ஆசிரியர் குறிப்பு)

இப் புவியினிடையே எழுமி சதம்போல் என்றுமாயிலகி இன்யாகி  ஒப்பிபடவேதும் இன்றிய பிரமத்து உற்றிடுங் பகுதி முன்னாய் அப்பிரபஞ்ச முறைமையை தூலவருந்த அதி நியாயமே என்ன செப்பினன் யாரும் தெளிவுறச் சேஷாத்திரி சிவன் என்னும் ஆதவனே.

 

நூல்

சுத்தப் பிரமமாயிருக்கின்ற சர்வசாக்ஷீயினிடத்திலே அக்கினியிற் சூடுபோல அபின்னமாக ஒரு சத்தி உண்டு; அந்தச் சத்தி அவ்வதீதப் பிரமத்தில் அடங்கியிருக்கும் போது அதற்குச் சுத்தப்பிரமமென்று பெயர். இந்தச் சத்தி விசிரிம்பித்துச் சுத்தப்பிரமத்தை வியாபிக்கும் போது அப்பிரமம் பரைவியாபகத்துள் இருந்தபடியினாலே அதற்குப் பரப்பிரமமென்று பெயராம்.

பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு தத்துவம் இருந்தது. அனைத்தையும் அறிந்த ஒரே சாட்சி அதுவே (ஒன்றே ஒன்று இருந்ததால் ).  இப்பிரமத்தின் உள்ளார்ந்த தன்மையாக சக்தி இருந்தது. (உவமை:நெருப்பினுடைய சூடு போல)  ஆரம்பத்தில் அதன் சக்தி வெளிப்படாமல் அடங்கி இருந்தது. அதன் பெயர் சுத்த பிரமம்.(1)

இரண்டாம் நிலையாக சக்தியானது ப்ரமத்தை முழுவதும் நிரம்பி இருக்கும் போது அப்பிரமத்தின் பெயர் பர பிரமம்.(2)

 

இலக்ஷண சூன்யமாயிருக்கின்ற இந்தச் சத்திக்குப் பிரயத்தினுடைய சந்நிதானத்தில் புருடசமுகத்திலே ஸ்திரீக்கு இன்பஞ் சனித்தாற் போல அவிகிர்த சத்துவ ரஜஸ் தமோ குணங்கள் உண்டாயின. அவற்றில் சுத்த சத்துவத்திற்கு ஆனந்தரூபசத்தி என்று பெயர். சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி என்று பெயர். சுத்த தமஸிற்குச் சத்ரூப சத்தி என்று பெயர்.

ஆரம்பத்தில் இச்சக்தியின் இலட்சணம் (தன்மை) ஏதும் இல்லாமல் இருந்தது. பின்பு இச்சக்தியிலிருந்து இயல்பாகவே சத்வம், ரஜஸ், தமோ குணங்கள் உண்டாயின. (உவமை: ஆணினால் பெண்ணிற்கு சுகம் கிடைப்பது போல) சுத்தமான (கலப்பில்லாத) சத்துவம் ஆனந்தரூபசத்தி எனவும், சுத்த ரஜஸிற்குச் சித்சொரூபசத்தி எனவும், சுத்த தமஸிற்குச் சத்ரூபசத்தி எனவும் பெயர்

 

இவற்றில் காரணமான ஆனந்தரூப சத்தியுடனே பரப்பிரம்மம் கூடிச் சர்வானந்த மென்னும் சுழுத்தியவஸ்தையை யடைகின்றபோது பரப்பிரமமென்கின்ற பெயர்போய்ப் பரமானந்தரென்கிற பெயர்வந்தது. இந்தப் பரமானந்தர் சித்ரூப சக்தியுடனேகூடிச் சர்வப் பிரகாசமென்னுஞ் சொப்பனாவஸ்தையை யடைகின்ற போது பரமானந்தரென்னும் பெயர் போய்த் தேசோமயரென்னும் பெயர் வந்தது. இந்தத் தேசோமயர் சத்ரூப சத்தியுடனே கூடிச் சர்வ வியாபகமென்னுஞ் சாக்கிராவஸ்தையை யடைகின்றபோது தேசோமயமென்னுஞ் பெயர் போய்ப் பரிபூரணமென்னும் பெயர் வந்தது.

பரபிரமம் ஆனந்தரூபசத்தியுடன் (கலப்பில்லாத சத்துவம்) சேர்ந்து சர்வானந்தம் (சுழுத்தியவஸ்தை) நிலையை அடைகிறது. பரமானந்தர் எனும் பெயரால் அழைக்க படுகிறது.(3)

பரமானந்தர் சித்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத ரஜஸ்) சேர்ந்து சர்வப் பிரகாசம் (சொப்பனாவஸ்தை) நிலையை அடைகிறது. தேசோமயர் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (4)

தேசோமயர் சத்சொரூபசத்தியுடன் (கலப்பில்லாத தமஸ்) சேர்ந்து வியாபகம் (சாக்கிராவஸ்தை) நிலையை அடைகிறது. பரிபூரணம் எனும் பெயரால் அழைக்க படுகிறது. (5)

 

[தொடரும்]