[பின் நவீனத்துவ லாஜிக், பகுத்தறிவு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு பதிவுலக நண்பர்களிடம் அவதார் கற்பனையாக படும் பாடு. தப்பிப்பு குறிப்பு: பதிவு முற்றிலும் கற்பனையானது. பதிவுலகின் சில குறிப்பிட்ட பதிவுகளை ஞாபகப்படுத்தினால் தற்செயலானதே ;) ]
பின் நவீனத்துவ லாஜிக் நண்பர்
ஜேம்ஸ் கேமரூன் என்பவரின் வாந்தி தான் அவதார். தனியாக நாவிக்களின் உடலையே செயற்கை கருவறையில் உருவாக்க முடியும் விஞ்ஞானிகளால் ஒரு மனிதருக்கு காலை செயல்படுத்த முடியாமல் போவதாக காட்டி இருப்பது எவ்வளவு பெரிய ஓட்டை. எனவே படம் ஆரம்பிக்கும் போதே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடுகிறது.
சில மணி நேரங்களிலேயே அனைத்து நாவிக்களையும் வானூர்தி மூலம் அழிக்க முடிந்த மனிதர்கள் ஆரம்ப காட்சிகளில் கவச உடை அணிந்து கனரக வாகனங்களில் செல்வதும் கோட்டை போன்ற அரண்களும் ஏற்படுத்தி கொள்வதும் ஏன்? (2 மணி நேரம் வேஸ்ட்)
நாவிக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று காட்டி இருப்பதை விட மிகப்பெரிய ஜோக் என்ன ? பெரிய கண்டாமிருகங்களும், சிறுத்தைகளும் உலவும் காட்டில் பெரிய சிங்கம் இல்லாதது இயக்குனரின் கற்பனை குறைபாட்டை தான் காட்டுகிறது. இப்படம் பார்த்த கருமத்தை தொலைக்க சில உயர்ந்த பதிவுகளை போட வேண்டியது தான்
இப்படத்தில் வரும் வன்முறை காட்சிகளும், ஆடை இல்லாமல் வரும் பெண்களும் ஜேம்ஸ் ஒரு சைக்கோ என்பதை காட்டுகிறது. முழு ஆணாதிக்க படமாகிய இதை மெல்லிய பெண்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இதை போன்ற ஒரு படம் எடுப்பதற்கு பதில் Cannibal Holocaust, Caligula [நன்றி பாலா] போன்ற பின் நவீனத்துவ படங்கள் 100 எடுத்திருக்க முடியும். ஏனெனில் இப்படங்கள் மசாலா படங்கள் என்று சொல்லி விட்டே எடுக்க படுகின்றன.
[அப்பாடா இன்றைய தினத்தை ஒப்பேற்றியாகி விட்டது. நம் நண்பர்களுக்கு சேட் செய்து ஓட்டு போட சொல்ல வேண்டியது தான்]
பகுத்தறிவு நண்பர்
இப்படம் நாவிக்களின் கடவுளாகிய புனித மரத்தை பற்றியது. மனிதர்களுக்கு மேலாக ஒரு சக்தி இருப்பதாகவும் அது தங்களை காப்பாற்றும் என்று நம்பும் நாவிக்கள் அழிவது பகுத்தறிவிற்கு பொருத்தமானதாக இருக்கிறது. ஆனால் கடைசியில் ஒரு மரத்தால் (கடவுளின் செயலால்) உயிர் காப்பாற்றபடும் என்று காட்டி இருப்பது எழுத்தாளரின் குடுமியை நமக்கு காட்டுகிறது.
கூடுவிட்டு கூடு பாயும் செயலை காட்டி இருப்பதை விட இப்படம் என்ன பெரியதாக சாதித்து இருக்கிறது ? முழுக்க முழுக்க ஒரு இந்து பார்ப்பனிய கருத்துக்களை திணிக்கும் படமாகிய இவற்றை புறக்கணிக்க வேண்டுமென நம் தலைவர் 1935ம் வருடமே நம் புனித ஏட்டில் கூறி இருப்பதால், அவரின் 2010ம் வருடத்தில் பொருந்தி வரும் தீர்க்க தரிசனத்தை நாம் உணர வேண்டும். வாழ்க அவர் நாமம். [இதற்கு நாமே தமிழ் மணத்தில் 3 ஓட்டுகள் போட வேண்டியது தான்]
ஏகாதிபத்திய எதிர்ப்பு நண்பர்
நாவிக்கள் எனும் பிற்போக்கு மக்கள் அறிவியல் அற்ற மலைகுடிகள் அறிவியலில் முன்னேறி இருக்கும் மனிதர்களுக்கு தேவையான மூலப்பொருள்களை தர மறுத்து போர் புரியும் படம் தான் இது. சிங்கூரிலும் இதை போலவே நடந்தது குறிப்பிட தக்கது. நிலம், பணம், மூல பொருள்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் எனும் மிகப்பெரிய தத்துவம் லெனின் எனும் தீர்க்க தரிசியால் உண்டாக்க பட்டது ஏன் என மக்கள் புரிந்து கொள்ளலாம்.
நாவிக்கள் எனும் பெரும்பான்மை இன மக்கள் மனிதர்களாகிய சிறுபான்மை இன மக்களை அழித்து ஒழிப்பது தான் இந்த ஏகாதிபத்திய வாத படம். தேசிய வாதத்தினாலும், இன வாதத்தினாலும் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்ல பட்டு இருப்பதை நாம் அறிவோம். மனிதர்களாகிய சிறுபான்மை மக்கள் எது செய்தாலும் அது நன்மையானது தான் எனும் நம் அறிய தத்துவம் மறந்த இயக்குனருக்கு கடும் கண்டனங்கள். (எப்போதும் போல நம் இயக்க தொண்டர்கள் திரட்டியில் பதிவு வரும் வரை ஓட்டு போட கேட்டு கொள்ள படுகிறார்கள்)
இப்படிக்கு,
எப்படத்திற்கும் லாஜிக் காண்போர் சங்கம்.