நாம் நம் இளமை காலங்களில், பார்வைக்கு இதமான இயற்கை எழில்கள் அமைந்ததும், நறுமண சுகந்தம் வீசுவதாகவும், சுவை தரக்கூடிய பண்டங்களுடையதும், இனிய இன்னிசையுடன், அப்சரஸ்களுடன் சல்லாபித்து இருக்க கூடிய சொர்கத்தை மண்ணுலகில் நிறுவக்கூடிய முயற்சியை செய்கிறோம்.
முதுமை அடையும் போது அவற்றையே சொர்கத்திலும் அடையக்கூடிய முயற்சி செய்வதையே தனிமனித மற்றும் புனித கடமையாக கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொரு முறை தவறுகளை இழைக்கும்போதும் இச்சொர்கத்திற்கு நேர் எதிரான நரகத்திற்கு பயப்படுகிறோம்.
இவ்வாறான முயற்சிகளாலான வாழ்க்கையில் நம் ஆழ்மனதானது உறக்கத்தின்போதும் கனவுலகில் அதே போன்ற சொர்கங்களையும், நரகங்களையும் உருவாக்கி மகிழ்கிறது. இவ்வாறான கனவுலகில் கூட நாம் நம்முடைய சுய அடையாளத்தை இழக்காமலேயே ஜீவிக்கிறோம். நம்மில் ஒரு சதவிகிதத்தினர் (இந்தியாவில் மட்டும் 1 கோடி பேர்) இவற்றிற்கு நேர் எதிரான ஒரு இரண்டாம் உலகத்தை நேரடியாகவே அனுபவிக்கின்றனர். அவர்களின் நனவுலகை நம்முடைய கனவுலகில் நுழைந்து பார்க்கும்முயற்சியே இது.
உங்களது உலகம் தனிமையில் சோகத்தில் இருக்கும் தருணத்தில்ஆரம்பிக்கிறது. இனம் புரியாத யார் யாரோ கெட்ட கெட்ட வார்த்தைகளால் திரும்ப திரும்ப திட்டுகின்றனர். தற்கொலை செய்து கொள் என குரல் மிரட்டுகிறது. பேய், பாம்பு போன்ற பயமுறுத்தும் உருவங்கள் திரும்ப திரும்ப தோன்றுகிறது, உங்களது அந்தரங்க பகுதிகளை உங்களது விருப்பதிற்கு மாறாக பார்ப்பது & தொடுவது போன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். தாங்க முடியாத நாற்றமும், உண்ணும் உணவில் விசம் அல்லது மலம் போன்றவை தட்டுபடுதல் போன்ற நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்தால் உங்களுடைய எதிர்வினை என்ன ?
பிரச்சிணை என்னவெனில் இச்சதி செயல் புரிபவர்கள் நீங்கள் தனிமையில் இருக்கும் போது தான் அதிகம் இச்செயலில் ஈடுபடுகிறார்கள். இவற்றால் மிகக்கலவரமடையும் நீங்கள் உங்களுடன் இருக்கும் ஆத்மாத்மானவர்களுடன் இந்நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறீர்கள். உங்களால் தெளிவாக உணர முடிகிற இவற்றை, அவர்கள் ஆனால் திட்டவட்டமாக மறுக்கிறார்கள்.
குரல்களும், தோற்றங்களும் அருகில் தோன்றுவதால் இவற்றை செய்வது உங்களை தெரிந்தவர் மட்டுமே. எனவே தான் நெருங்கியவர்களும் கூட சுய ஆதாயம் கருதி உங்களை துன்புறுத்துபவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கவே செய்கிறது என்ற முடிவிற்கு வருகிறீர்கள்.
எனவே அவர்களுக்கும், உலகத்திற்கும் நிரூபிக்க வேண்டி தடயத்தை கண்டுபிடித்து பதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. உங்களுக்கு கேட்கும் குரல்களையும் காட்சிகளையும் பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள். அவற்றை பதிவு செய்வதில் தோல்வி அடையும் போது தான்சாதாரண மனிதர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு சக்தி வேலை செய்வதாக புரிந்து கொள்கிறீர்கள்.
இது நீங்கள் நேரடியாக சிலரிடம் கேட்டும் கதைகளில் படித்தும்இருக்கும் செய்வினை, வசியம், சூன்யம் ஆகியவற்றிற்கு சமமாக இருக்கிறது அல்லது படித்த நாவலில் வரும் CIA, RAW போன்ற உளவுத்துறை கையாளும் மனத்தை கட்டுபடுத்தும் தொழில்நுட்பத்திற்குஒப்பாக இருக்கிறது.
இவ்வாறு சமுதாய உறுப்பினர்கள் அணைவரும் கைவிட்டபின், மனிதனின் மிகப்பெரும் நம்பிக்கையான ஆன்மீகம் நோக்கி செல்கிறீர்கள். செய்வினைக்கு மாத கணக்கில் கோவிலில் ஹோமங்கள் செய்தோ, மசூதிகளில் தொழுகைகள் செய்தோ, சர்சுகளில் ஊழியம் செய்தோ நாட்களையும் பனத்தையும் செலவு செய்யும் போதும், மேலும் மேலும் குரல்களும், காட்சிகளும் அதிகரிக்கும் போது உங்களுடைய மிகப்பெரும் நம்பிக்கையும் சீர்குலைகிறது.
எனவே இத்தொல்லைகள் தாங்க முடியாத அளவிற்கு போகும் போது, உங்களால் முழுவதும் நம்ப பட்டவர்கள் அணைவரும் கை விட்ட பின், சட்டம் ஒன்று தான் வழியாக படுகிறது.காவல்துறையினரிடம் ஒரு குழுவோ, அமைப்போ அல்லது உங்களது வீட்டில் உள்ளவர்களோ அல்லதுஉடன் பணி புரிவர்களோ அல்லது அருகில் வசிப்பவர்களோ உங்களை கொடுமை படுத்துவதாக புகார்செய்கிறீர்கள்.
ஆனால் அவர்களோ உங்களின் புகாரை முற்றிலும் புறக்கணிக்கிறார்கள். உங்களது பேற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தகவல் சொல்லி உங்களை ஒப்படைக்கின்றனர். உங்களைபெற்றோரோ/வாழ்க்கை துணையோ உங்களை திமிர் பிடித்தவர் என்றும் பிடிவாதகாரர் என்றும் பட்டம் கட்டி திட்டியும்/அடித்தும் வெறுப்பை தொடர்ந்து ஏன் விதைத்தால் வேறு என்ன தான் செய்வது ? எல்லோரும் உங்களை நக்கலாகபார்க்க ஆரம்பிக்கும் சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருக்கிறது. “கிறுக்கு”, “பைத்தியம்”போன்ற வார்த்தைகள் சுற்றி உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாமல் பேச ஆரம்பிக்கிறார்கள்.
இப்படி உங்கள் வாழ்க்கையே நரக உலகத்திற்கு இட்டு சென்றால்இதன் முடிவு என்னவாக இருக்கும் என நிணைக்கிறீர்கள் ?
கனவுலகில் இருக்கும் நம்மால், நம் கனவை எளிதாக கலைத்து விட்டு எழுந்து விட முடிகிறது. ஆனால் உண்மையில் இம்மாதிரியான நனவுலகில் வாழும் மன பாதிப்புக்குள்ளானவர்களால் அவ்வாறு இயலுவதில்லை.
மேலே பார்த்த சூழ்நிலை ஒரு வகை எடுத்துகாட்டு மட்டுமே. இதற்கு எதிர்மாறாக, நன்றாக கலகலவென பழகும் சிலர், தீடீரென்று தங்களுடன் நன்றாக பழகியவரின்குரல், உருவத்தை கூட மறந்து போதல், யாரிடமும் பழகாமல் தங்களை ஒரு அறையினல் ஒதுக்கி கொள்ளுதல், தங்களுடைய அன்றாட கடமைகளான பல் துலக்குதல், மலம் கழித்தல் போன்றவற்றை கூட செய்ய முணையாமல் இருப்பது, என ஒவ்வொரு புலன்களையும் உணரும் திறன் மூளைக்கு மழுங்குதல்போன்றவற்றிற்கு ஆளாகக்கூடும். இது இரண்டாவது வகை.
வயிற்று வலியினால் தற்கொலை என பதியப்படும் பல வழக்குகள், செய்வினையால் குடும்பம் அழிந்தது என வருத்தப்படும் பல நிகழ்வுகள் என கூர்ந்து கவனித்துபார்த்தால், இந்நிகழ்வு உங்கள் கிராமத்தில் / பகுதியில் யாரேனும் ஒருவருக்கு நடந்ததாகதான் இருக்கும்.
செய்வினை என தவறாக கருதப்படும் ஸ்கிட்ஸோஃபிர்னியா (Schizophrenia - மனப்பித்து)
அறிகுறிகள்
1. மனப்பிரமைகள் tactile, auditory, visual, olfactory and gustatory hallucinations, ஐந்து புலன்களையும் உணர்ந்தறிவதில் உண்டாகும் பிறழ்வு( பார்வை, கேட்கும்திறன், சுவை, நுகர்தல் மற்றும் தொடு உணர்ச்சி), எடுத்துகாட்டுகளில் முதலாவது கூடுதல்உணர்வுகள் எனவும், இரண்டாவது குறை உணர்வு எனவும் கொள்ளலாம் positive and negative (or deficit) symptoms
2. திரிபுணர்வுப்பிணி (paranoid),
3. பயங்கரமான மருட்சி (delusion) அல்லது
4. ஒழுங்கில்லாத பேச்சும், சிந்தனையும் இவற்றுடன்
5. சமூக வழக்கங்கள் மற்றும் பணி செய்யும் திறன் திரிதல்
ஆகியவை ஸ்கிட்ஸோஃபிர்னியா(மனப்பித்து) எனும் மனதின் நோயின் அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
- சிறுவயதில் மோசமான சூழ்நிலைகளை சந்தித்து இருப்பவர்கள் (மோசமான தாய்/ தந்தை/ சகோதரர்கள்/நெருங்கிய உறவினர்கள்), வன்முறைக்கு ஆளாக்கபட்டவர்கள், பாலியல் ரீதியில் துன்புறுத்தபட்டவர்கள்,எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள், கடும் வறுமைக்குள்ளானவர்கள், இன துவேசத்திற்கு ஆளானவர்கள்,கொடுமையான இடங்களில் வசிப்பவர்கள் இவ்வகையில் பாதிக்கபட வாய்ப்பு அதிகம்.
- நகரத்தில்வாழ்பவர்களும், அதிகமாக நண்பர்களை கொண்டிராதவர்களும், எளிதாக புதியவர்களுடன் பழக தெரியாதவர்களாலும்,நம்பிக்கை துரோகத்தால் பாதிக்க பட்டவர்களுமே இவ்வகையில் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
- இவையல்லாமல்மரபணு காரணமாக பரம்பரை(தாய், தந்தை, தாத்தா, பாட்டி) வழியிலும் இந்நோயால் பாதிக்கபடவாய்ப்பு இருக்கிறது.
- மகப்பேற்றின்போது ஏற்படும் கோளாறுகளும் குழந்தையை இந்நோய் தாக்க காரணம்.
- மெதாம்ஃபெடமைன் மற்றும் கொக்கெயின் போன்ற போதை பொருள்களும் உளப்பிணிகளுக்குக் காரணமாகும் என்று அறியப்பட்டுள்ளது. மது, கஞ்சா போன்றவையும் , தவறான மருந்து உட்கொள்தலும் இந்நோய் உருவாக காரணமாக அமையலாம்.
ஆண்களிலும் பெண்களிலும் ஸ்கிசோஃப்ரினியாசம அளவிலேயே ஏற்படுகிறது; இதன் ஆரம்ப கட்டம் ஆண்களில் 20-28 வயதிலும் பெண்களில் 26-32 வயதிலுமாக உள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏற்படுவது என்பது அரிதானது, அதைப்போலவே நடுத்தர வயது மற்றும் முதிர்ந்த வயதுஆகியவற்றிலும்இது அரிதானது.
மேலும் இந்த நோய் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து யாரை வேண்டுமானாலும் தாக்க கூடும். உதாரணமாக இராமானுஜம் (இவர் ஈரோட்டு சீனிவாசன் இராமானுஜம் அல்ல சென்னைகாரர்) எனும் மிகப்பெரிய இந்திய கணித மேதை இந்நோயினால் பாதிக்கப்பட்டு, சரியாக மருத்துவம்செய்யப்படாத காரணத்தால், இந்நோய் தொல்லை தாங்க முடியாமல், தனது 37 வயதிலேயே அதிகப்படியானமருந்துகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நோயிற்கு மருந்துகளும், திட்டமிட்ட மருத்துவமுறைகளும் உள்ளன என்பதும், இந்நோயை வெற்றி கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்தவர்களும்இருக்கிறார்கள் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம்.
இந்நோயால் பாதிக்கப்பட்டும் அதிலிருந்து மீண்டு வந்து 1994 வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு பெற்றவர் யு.எஸ் கணித மேதை திரு.ஜான் நேஷ் John Forbes Nash Jr . இவரை பற்றிய "எ ப்யூட்டி ஃபுல் மைன்ட்” ஸ்கிட்ஸோஃபிர்னியா பற்றி சரியாக சித்தரிக்கும் மிக அருமையான படம் (2001 வருடத்திற்கான ஆஸ்கார்விருது பெற்றது)
Schizophrenia நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து குடும்ப உதவியினால் வாழ்க்கையையும் அமைத்து கொண்டு பல முக்கிய தமிழ் படைப்புகள் எழுதிய தமிழ் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர்.
இந்தியர்களும், மனப்பித்தும்
இந்தியர்களுக்கு இவ்விசயத்தில் நேர்மறை நன்மைகளும், எதிர்மறை தீமையும் உண்டு. மிகப்பெரிய எதிர்மறை சூழ்நிலை என்னவெனில் செய்வினை, சூன்யம், வசியம், மாந்திரீகம் என்ற பெயரில் நடக்கும் தவறான வழிகாட்டல்கள் தான். படித்தவர்களும், பண்பானவர்களும்கூட இந்த முறைக்கு பலியாவதில் இருந்து தடுக்க முடிவதில்லை.
பாதிக்கபட்டவர் ஒருமுறை இவற்றை நம்ப ஆரம்பித்தால், அதிலிருந்து விடுபட்டு மனோ/மருத்துவ ரீதியான முறைக்கு கொண்டு வருவது மிகக்கடினமாகும். ஏனெனில் தங்களிடம் இப்பிரச்சிணைக்கு முழுமையான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்ப வைக்கின்றனர்.
ஆனால் நோயாளிக்கு இவற்றில் தீர்வு கிடைக்காமல் கேள்வி கேட்கும்போது, மேலும் பணம் பறிப்பதற்காகவும், தன் பெயர் கெட்டு விட கூடாது என்பதற்காகவும் பாதிக்கபட்டவர்களிடம் தங்களது தோல்வியை வெளிகாட்டி கொள்ள இந்த மாந்திரீகர்கள் தயங்குவர். எனவே வித விதமான பெயரில் புதுப்புது ஹோமங்கள் செய்ய தான் முற்படுவர்.
நோயாளிகள் தங்களது பிரச்சிணையின் உண்மை நிலையை புரிந்து கொள்வதே இந்நோயை தீர்க்க முக்கியமான விசயம். அப்போது தான் மருத்துவத்தின்அவசியத்தை புரிந்து கொண்டு சரியாக கடைபிடிப்பர்.
இவ்வகை நோயாளிகள் அதிகம் பாதிக்கபடுவது தனிமையாலும், கைவிடபட்டுவிட்டோம்என்ற மனநிலையாலுமே ஆகும். இதை சரி செய்வதற்கு மாறாக வழிபாட்டு தலங்களில் விடப்படுகின்றனர். எனவே வீடுகளிலும், கோவில்களிலும், தர்காவிலும், சர்சுகளிலும் கட்டி போடப்பட்டுள்ள நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கபடுகின்றனர்.
அவர்களுக்கு தேவை நமது ஆதரவும், அன்பான வார்த்தைகளும் தானே ஒழிய, வழிபாடு அளிக்கும் தனிமை அல்ல என்பதை முக்கியமாகஉணர வேண்டும்.
மேற்கத்திய கலாசாரத்தைஒப்பிடும் போது இந்தியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சாதகமான அம்சம் உதவி செய்யும் குடும்ப அமைப்பு ஆகும். சரியாகபுரிந்து கொள்ள வைக்கபட்டால் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு பெற்றோரும், வாழ்க்கை துணையும்உதவி செய்யவே விரும்புகின்றனர். இது மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய நோயாளிகள்மிக விரைவில் குணமடையவும், குடும்ப வாழ்வை அமைத்து கொள்ளவும் உதவுகிறது.
மருத்துவம்
நோயாளிகளின் பிரச்சிணையை அவர்கள் கேட்கும் ஒலிகளையும், காட்சிகளையும் வெளிப்படுத்தும் போதே பெரும்பாலும் மற்றவர்களுக்கு தெரிவிக்க படுகிறது. இப்பிரமை என்பது பிரச்சிணையின் வெளிப்பாடு மட்டுமே. அதுவே முழுப்பிரச்சிணை அல்ல. இப்பிரமையை தீர்க்க அவை தோன்றிய மூல காரணத்தை மனதை ஆய்வு செய்து நீக்குவதன் மூலம் மட்டுமே நீக்க முடியும்.
நோயாளிகளிடம் அவர்கள் உணர்வது வெறும் மன பிரமை மட்டுமே, அவை உண்மையல்ல என்று அறிவுரைகள்/விவாதங்கள் செய்வது பலனை அளிக்காது. அது எதிர்மறை தீமைகளை மட்டுமே விளைவிக்கும். எனவே நோயாளிகள் பிரமைகளின் மூலம் படும் துன்பத்தின் ஆழத்தை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முயல வேண்டும்.
இந்நோய் எவ்வளவு விரைவில் கண்டுபிடித்து கவனிக்க படுகிறதோ அவ்வளவுவிரைவில் குணமாக்க முடியும். இந்நோயை குணமாக்க மருந்துகளுடன் கூடிய கூட்டு மருத்துவம்நடைமுறைபடுத்த படுகிறது.
- ஸ்கிசோஃப்ரினியாவுக்கான முதல் மருத்துவத் தெரிவு antipsychotic ஆன்டிசைகோடிக் எனப்படும் உளப்பிணி எதிர் மருத்துவமாகும். இவை உளப்பிணியின் நேர்மறை அறிகுறிகளைக் குறைக்கலாம். பல உளப்பிணி எதிர்மருத்துவங்களும் அவற்றின் பிரதான விளைவை அளிக்க 7-14 நாட்கள் எடுத்துக் கொள்ளும்
- ஸ்கிசோஃப்ரினியாசிகிச்சையில் உளவியல் மருத்துவமும் பெருமளவில் பரிந்துரைக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும் உள்ளது.
- புரிதிறன் நடத்தை சிகிச்சை(cognitive behavior therapy) குறிப்பிட்ட அறிவு திறன் அறிகுறிகளை இலக்காக கொள்வதற்கும் அவற்றுடன் தொடர்புடைய சுய மதிப்பு, சமூகத்தில்செயலாற்றும் திறன் மற்றும் உட்பார்வை ஆகியவற்றை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
- ஸ்கிசோஃப்ரினியா கொண்டுள்ள ஒருதனி நபருக்கான சிகிச்சையில் அவரது குடும்பம் முழுவதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் குடும்ப சிகிச்சை அல்லது கல்வி, குறைந்த பட்சமாக அந்த இடையூடு நீண்ட காலத்திற்கானதாக இருக்கும்போது, பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
யாரிடம் உதவி கேட்கலாம்?
schizophreniaக்குஎன்றே schizophrenia research and foundation of india எனும் அரசு சாரா நிறுவனம் 1984 ம் ஆண்டு மனவியல் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டு சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்றது. இங்கே இலவசமாகவே மருத்துவ ஆலோசனையும் வழங்கி வருகின்றார்கள். மிக சிறந்த சேவையை முடிந்த அளவு கொடுக்கின்றார்கள்.
மருத்துவமனையில் எப்போது சேர்க்க வேண்டும்?
இந்நோய் அதிகம் பாதிக்கப்பட்ட சிலர் அபூர்வமாக சிலநேரங்களில் வன்முறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது. அல்லது தற்கொலை போன்றசெயல்களிலும் ஈடுபடலாம்.
உதாரணமாக மும்பையில் தொடர் கொலைகளில் (9 பேர்) ஈடுபட்ட ராமன்ராகவ் Chronic paranoid schizophrenia நோயால்கடுமையாக பாதிக்கபட்டவர். அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு எஞ்சிய வாழ்நாள் முழுவதும்மன நோய் மருத்துவமனையில் கழித்தார்.
மிகவும் தீவிரமான நோயாளிகளில்-அதாவது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து நேரும் சாத்தியமிருந்தால் அவர்களை பலவந்தமாக மருத்துவ மனையில் சேர்ப்பது அவசியமாகலாம்; இருப்பினும், இவ்வாறு மருத்துவ மனையில் சேர்க்கப்படுவதும், அங்கே தங்கியிருக்கும் கால அளவும் தற்போது குறைந்து வருகிறது.
References