அன்புள்ள ஜெயமோகன்,
தங்களுடைய காந்தியும் காமமும் பற்றிய கட்டுரைகள் படித்தேன். இந்த கட்டுரைகளுக்கு சில நண்பர்களின் எதிர் வினைகள் மிக மன வேதனையை ஏற்படுத்தியது. தியானம், மனவலிமை, பிரம்மச்சரியம், புலனடக்கம் பற்றிய தவறான பரப்புரைகள் மூலம் விளக்கங்கள் குறைவான இன்றைய காலகட்டத்தில் உள்ளோம் . அந்நண்பர்கள் புரிந்து கொண்டது இவ்வாறு தான் என எண்ணுகிறேன்.
1. தாந்திரீகம் உடலுறவை ஊக்க படுத்த கூடியது
2. காந்தி தனது பேத்தியுடன் உடலுறவு கொண்டார்
3. பிரேமானந்தாவை போன்ற போலி சாமியார்
எனக்கு தெரிந்த வகையில் விளக்க முற்படுகிறேன். உண்மை என்ன என்பதை மேலும் தாங்கள் விளக்க வேண்டுகிறேன்.
இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் போது காந்தி ஒரு பிரம்மச்சாரி என்பதையும், உடலுறவை முற்றிலும் தவிர்த்தவர் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். தியானம் & தாந்திரிகம் பற்றிய புரிதல் இல்லாமல் இந்நிகழ்வை எதிர்க்கும் நண்பர்களுக்கு விளக்க வேண்டி ஒரு உதாரணம் தர விரும்புகிறேன்.
- தாந்திரீகத்தில் ஒரு வழி எல்லா பெண்களையும் தாயாக காணுதல். அதன் மூலம் உடலிச்சையை அகற்றுதல். (தாந்திரிகத்தில் மேலும் பல வழிகள் உள்ளன. காந்தி கடைபிடித்தது அவை அல்ல. அவை இங்கே பொருந்தி வரக் கூடியவை அல்ல.)
- ஒரு மனிதன் தன் தாயின் உடலை முழு நிர்வாணமாக காண நேர்ந்தால் அது உடலிச்சையை தூண்டுமா ? அல்லது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துமா ? அல்லது பக்தியுடன் தொழ தோன்றுமா ?
- காந்தியின் தாயார் உயிருடன் இருந்திருந்தால் தன் தாயுடனும் இதே வகையான சோதனையை மேற் கொண்டிருப்பார். உண்மையில் மற்ற பெண்களிலும் தாயையே கண்டார் என்பது தான் இங்கு அடிப்படையே
மேலும் மேற்கண்ட நிகழ்வை சரியான வகையில் புரிந்து கொண்டால்,
- தாந்திரிகம் எனபது ஒரு கருவி. அது உடலுறவை இயற்கையின் ஒரு பகுதி என தியானத்தின் கருவியாக உபயோக படுத்துகிறது. உடலுறவை வளர்ப்பதும் இல்லை. எதிர்ப்பதும் இல்லை. தாழ்வு மனப்பான்மை கொள்வதும் இல்லை.
- காந்தி ஈடுபடுத்தி கொண்டது அக்னி பரிட்சை கூட இல்லை. நெருப்பாற்றில் நீந்துவது. தனது பேத்தியுடன் இவ்வாறு இருந்தது (ஆடையின்றி தாயின் அரவணைப்பில் இருந்தது போல) உடலுறவிற்காக இல்லை. காந்தி என்பதே ஒரு உடல் இல்லை. உடலை துறந்தவன் என்பதை உணர்த்துவதற்கு ஏற்படுத்திய வழி.
- காந்தி ஒரு மகாத்மா
என்பது யாவரும் ஒப்பு கொள்வர்.
தாந்திரிகம் என்பது மேல் நிலை தியானம். அது தியானம் பற்றி அடிப்படை கூட அறியாத பொது மக்களுக்கு அறிவிக்க படுதல் இது போன்ற எதிர்மறையான எண்ணங்களையே ஏற்படுத்தும். எனவே தான் இந்நிகழ்வுகள் பெரும்பான்மை மக்களுக்கு அறிவிக்க படுவதில்லை. தாந்திரிகத்தில் விருப்பப்படுபவர்கள் மட்டுமே அறிந்து கொண்டுள்ளனர்.
காந்தியின் மேல் சுமத்தபடும் அரசியல் குற்றசாட்டு இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்ட பட்டனர் என்பது. இவ்வகை குற்றசாட்டுகளுக்கு வரலாற்று அறிவு பெற்ற நீங்கள் விளக்குவதே சிறப்பானதாக இருக்கும்.
காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியமும், தாந்திரிகமும் பயிற்றுவிக்க பட்டதா ? இதில் ஈடுபடுத்த பட்ட பெண்கள் தாந்திரிகம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றவர்களா ?
தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி
சபரிநாதன் அர்த்தநாரி.