யாரை ஆதரிப்பது / எதிர்ப்பது ?
தமிழ் பதிவுலகில் மனதிற்கு வருத்தமளிக்கும் நிகழ்வு நடைபெற்றதாக அறிகிறேன். எப்போதெல்லாம் பதிவின்/பின்னூட்டத்தின் கருத்துக்களை விட்டுவிட்டு பதிவரின் மேல் சொற்கணைகள் வீசப்படுகிறதோ அப்போதெல்லாம் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதை என் வாசிப்பு அனுபவத்தில் உணர்கிறேன். இரு தனிப்பட்ட நண்பர்களுக்கு இடைப்பட்ட வேறுபாடு இப்போது ஆண்/பெண், மேல்சாதி/கீழ்சாதி பிரச்சிணை போன்ற பல்வேறு வடிவங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
நான் விரும்பும் ஒரு பதிவர் மனதால் காயமுற்று இருக்கிறார். மற்றொரு நண்பரோ பதிவுலகில் இருந்து தற்காலிகமாகவேனும் வெளியேறுவதாக சொல்லி இருக்கிறார். இது ஒரு loss & loss நிலைமை. அதாவது இருதரப்பினருமே காயம் பட்டு இருக்கின்றனர்.
நர்சிம் அவருடைய இடுகையை நீக்கி விட்ட நிலையில் இருவரின் மனப்புண்ணையும் நோண்டி நோண்டி பெரிதாக்குவதை விட்டு விட்டு இது அவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட விடயமாக கருதி அனைவரும் விலகி நிற்பதே நல்லது என தோன்றுகிறது. (மற்றவர்களின் பதிவை படித்தே பிரச்சிணையை பெரும்பாலானோர் தெரிந்து கொண்டதாக உணர்கிறேன்)
வேண்டுகோள்
விளையாட்டாக ஆரம்பிக்கும் விசயங்கள் தான் எப்போதும் மிகமோசமான நிலைமைக்கு கொண்டு செல்வதாக உணர்கிறேன். நமக்கு நகைச்சுவையாக இருக்கும் கருத்து அடுத்தவர் மனதை புண்படுத்தி விடுமா என்பதை எழுதும் முன் சீர் தூக்கி பாருங்கள்.
எப்போதும் கோபத்தில் பதிவு எழுதாதீர்கள். அதிலும் அடுத்தவர்களை பற்றியது எனில் பதிவு செய்து ஒரு நாள் பொறுமையாக இருந்து விசயங்களை மனதில் ஆராய்ந்து மனதிற்கு உகந்ததாக இருந்தால் மட்டும் பதியுங்கள். பின்பு அதை நீக்க வேண்டிய தேவை இருக்காது.
இந்த நிகழ்விலும் நடந்தது அதுவே. எனவே எப்போதும் கருத்துக்களுக்கு மட்டுமே எதிர்வினை செய்யுங்கள். தனிப்பட்ட பதிவர்களின் சொந்த விசயங்களுக்கு அல்ல.
எது நம்மை இணைக்கிறது ?
நண்பர்களே உலகமெல்லாம் இருக்கும் நம் உள்ளங்களை இணைக்கும் ஒரே சொல் அது “தமிழ்”. அது நம்மை இணைக்கவே செய்கிறது. நாமே நம்முள் பிரிந்து கொள்கிறோம். அதற்கு அவசியம் இல்லை என்பதே என் கருத்து. ஒருவருக்கொருவரின் முகம் தெரியாமல் மனம் அறியாமல் தமிழன் என்ற ஒரே உணர்வே நம்மை இணைக்கிறது.
நரசிம்மின் இராமாயண விளக்கங்களை விரும்பும் நான், சந்தணமுல்லையின் கம்யூனிச கருத்துக்களையும் விரும்பி படிக்கிறேன். இது இரண்டும் முரணாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை இரண்டுமே தமிழிற்கு அழகு சேர்ப்பவையே. இவற்றில் எதை இழந்தாலும் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு பகுதியை இழப்பது தான்.
[பி.கு. நண்பர்கள் இருவரையும் நான் சந்தித்தது கூட இல்லை. இதில் இருக்கும் கருத்து, நன்மையை எதிர் நோக்கியே எழுதப் பட்டது.]